உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மகா தீபம் நிறைவு!

திருவண்ணாமலை மகா தீபம் நிறைவு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், மஹா தீப விழா இன்று (நவ., 27) தேதி நிறைவடைகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்து மகா தீபத்தை தரிசித்து செல்கின்றனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 8ம் தேதி தொடங்கி, 17ம் தேதி வரை நடந்தது. கடந்த, 17ம் தேதி மாலை, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் மலை மீது எரியும் மஹா தீபத்தை தரிசனம் செய்ய, பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனால், தினமும் மாலை நேரத்தில், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. மலை மீது பிரகாசிக்கும் மஹா தீபம், இன்று (நவ., 27) தேதி இரவுடன் நிறைவு பெறுகிறது. நாளை, மலை உச்சியில் இருந்து, மஹா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்படும். அங்கு தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பாதுகாப்பாக வைக்கப்படும். அடுத்த மாதம், 18ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தின் போது, மஹா தீப மை பிரசாதம் நடராஜருக்கு அணிவிக்கப்பட்டு பின், பக்தர்களுக்கு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !