பழமையான சோமசமுத்திரம் சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?
செஞ்சி: சோமசமுத்திரத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புராதன நகரங்களில் ஒன்றான செஞ்சியை சுற்றி பல கோவில்கள் உள்ளன. பல்லவர்கள், நாயக்கர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் கட்டிய இக்கோவில்களின் பெரும் பகுதி ஆற்காட்டு நவாப்பின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டன. இதில் செஞ்சிக்கோட்டை சந்திரகிரி மலைக்கு பின்புறம் சோம சமுத்திரம் கிராமத்தில் பழமையான சிவன் கோவிலும் தப்பவில்லை. இடிபாடுகளுடன் இருக்கும் இந்த கோவிலில் இருந்த சிவலிங்கத்தையும், நந்தி ஒன்றையும் எடுத்து கோவிலுக்கு வெளியே உள்ள திறந்த வெளியில் கூரை அமைத்து கிராமமக்கள் வழிபடுகின்றனர். மதில் சுவருடன் உள்ள இந்த கோவிலின் வாயில் பகுதியும், அதை அடுத்துள்ள மண்டபமும் இடிந்து உள்ளே செல்ல முடியாத வகையில் உள்ளன. வட்ட வடிவிலான கருவறை கோபுரம் இடிந்த நிலையில் உள்ளது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று பிரகாரம் என சிறந்த முறையில் பெரிய தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டியுள்ள இந்த கோவில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. தொன்மை வாய்ந்த பகுதி என்பதற்கு ஆதாரமாக இங்குள்ள மலைமீது 6ம் நூற்றாண்டை சேர்ந்த சமண படுக்கை உள்ளது. கோவில் எந்த ஆட்சியின் போது கட்டப்பட்டது என்று தெரிந்து கொள்வதற்கும் உள்ளே செல்ல முடியாத நிலையில் இந்த கோவில் உள்ளது. நமது கலாசாரத்தையும், கட்டட கலையையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ள இக்கோவிலை புதுப்பிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மீது தமிழக அரசு, அறநிலையத்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து விரைவில் கோவிலை சீரமைப்பார்கள் என பொது மக்கள் எதிர் பார்க்கின்றனர்.