குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்!
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, செம்பை சங்கீத உற்சவம் துவக்க விழா நேற்று நடந்தது.கிருஷ்ணர் கோவிலில், கார்த்திக்கை மாத ஏகாதசி உற்சவ விழா, அடுத்த மாதம், 13ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, செம்பை சங்கீத உற்சவ துவக்க விழா, நேற்று கோவில் வளாகத்தில், மேல்பத்தூர் கலையரங்கில் நடந்தது. தேவஸ்தான நிர்வாகக் குழு செயலர் சந்திரமோகன் தலைமை வகித்தார். விழாவை துவக்கி வைத்து, கேரள அறநிலைய துறை அமைச்சர் சிவகுமார் பேசுகையில், ""எதிர்வரும் நூறு ஆண்டுகளில் ஏற்படப்போகும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, குருவாயூருக்கு, "மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதற்கு வசதியாக, தனி அரங்கு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. வசதியற்ற பக்தர்கள் தங்க, புதிதாக அரசு விடுதி கட்டப்படும், என்றார்.விழாவில், இந்த ஆண்டுக்கான, குருவாயூரப்பன் செம்பை விருதை, சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்துக்கு அமைச்சர் வழங்கினார். இதையடுத்து, கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் கச்சேரி நடந்தது.