உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் விழா

வெள்ளகோவில் மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் விழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில், அடுத்த சொரியங்கிணற்றுபாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் விழா துவங்கியது வெள்ளகோவில், சொரியங்கிணற்றுப்பாளையத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், கார்த்திகை கடைசி வாரம், பூச்சாட்டுதல் நடப்பது வழக்கம். பூச்சாட்டுதலில் இருந்து, 15வது நாள், பொங்கலிட்டு, பிரமாண்டமான வழிபாடு நடத்தப்படும். இதை, 15 நாள் சாட்டு என்பர். வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள, 18 ஊர்களை சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்பார்கள். கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 2வது ஆண்டாக, கடந்த நவம்பர், 26ம் தேதி மாலை, 7 மணியளவில் பூச்சாட்டுதல் துவங்கியது. கோவில் பூச்சாட்டுவதில், இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. உடன், காங்கேயம் தாசில்தார் கனகராஜ், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, ஆர்.ஐ., தேவராஜ், வி.ஏ.ஓ., மோகன்ராஜ் ஆகியோர், இருதரப்பினர் மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு கண்டனர். பின், பூச்சாட்டுதலை தொடர்ந்து தினமும் காலை, மதியம், மாலை என, 3 கால பூஜை, மஞ்சள் நீர் வைத்து, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. டிசம்பர், 3ம் தேதி கும்பம் எடுத்தல், கம்பம் நடுதல், டிசம்பர், 9ம் தேதி காலை, 9 மணிக்கு குதிரை எடுத்து வருதல், 10ம் தேதி காலை, 10 மணிக்கு மேல் காவடி கொடுமுடி புறப்படுதல், 11ம் தேதி காலை, 6 மணிக்கு பொங்கல் வைத்தல், காலை, 11 மணிக்கு தீர்த்தம், அபிஷேக ஆராதனை நடக்கிறது. டிசம்பர், 12ம் தேதி, கோவிலில் பூவோடு எடுத்து, அலகு குத்தும் அம்மன் வழிபாடு நடக்கிறது. மாலை, 6 மணிக்கு மேல் கம்பம், கும்பம், கங்கை செல்லுதலும், மறுதினம் காலை, 9 மணிக்கு மறு அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !