சிவாலயங்களில் சனிப்பிரதோஷம் கோலாகலம்!
ஊத்துக்கோட்டை: சிவாலயங்களில் நடந்த சனிப்பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், சிவபெருமான் உலகை காக்கும் பொருட்டு, ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து உறங்கும் நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களுக்கு முன் வரும் திரயோதசி திதி நாட்களில் பிரதோஷ விழா கொண்டாடப்படும். சிவபெருமான் விஷத்தை உண்ட தினம் சனிக்கிழமை, அந்நாளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு சிவபெருமான், நந்தியம் பெருமான் ஆகியோருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அருகம்புல், மலர்மாலைகளால் நந்தியம்பெருமான் அலங்கரிக்கப்பட்டார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.