மீனாட்சி அம்மன் கோயிலில் பார்கோடிங் கட்டண டிக்கெட்!
தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம்: தமிழகத்திலேயே, முதன்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், முறைகேடுகளை தவிர்க்க, "பார்கோடிங் முறையிலான கட்டண டிக்கெட், நேற்று அறிமுகப் படுத்தப்பட்டது. இக்கோயிலில், இலவச தரிசனம் தவிர, கட்டண தரிசன முறையில் ரூ.100 செலுத்தி, அம்மன், சுவாமி சன்னதிக்கு செல்ல முடியும். இதற்காக, டிக்கெட் கிழித்து கொடுக்கப்பட்டு வந்தது. கூட்ட நெரிசலில், சில டிக்கெட்கள் கிழிக்கப்படாமல் போவதுண்டு. அதை பயன்படுத்தி, மீண்டும் தரிசனம் பார்க்க செல்பவர்களும் உண்டு. மேலும், கோயில் ஊழியர்கள் சிலர், மோசடியில் ஈடுபடுவதை தடுக்க, நேற்று முதல் ரூ.100 கட்டண டிக்கெட்டிற்கு மட்டும் "பார்கோடிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டை பாக்கெட் சைஸில் உள்ள இந்த டிக்கெட்டில், அம்மன் கருவறை படமும், "பார்கோடிங் மற்றும் கட்டண தொகையும் தனியே அச்சிடப்பட்டுள்ளன. இந்த டிக்கெட்டை இருமுறை மட்டுமே "ஸ்கேன் செய்ய முடியும். அதாவது, அம்மன், சுவாமி சன்னதியில் "ஸ்கேன் செய்த பிறகு, மீண்டும் பயன்படுத்த முடியாது. பின், "பார்கோடிங், கட்டண விபரத்தை கிழித்துவிட்டு, அம்மன் படத்தை பக்தர்கள் வைத்து கொள்ள முடியும். தினமலர் நிருபரிடம் கோயில் இணைகமிஷனர் ஜெயராமன் கூறுகையில், ""கோயிலில், ரூ.100 கட்டண டிக்கெட் தவிர மற்ற அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டது. தமிழகத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பார்கோடிங் வசதி மூலம், தினமும் எவ்வளவு டிக்கெட் விற்கப்பட்டுள்ளன; குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியமுடியும், என்றார்.