ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு!
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நான்கு நாள் தடையில்லா மின்சாரம், 3 இலவச பஸ்கள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. "பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். இதில், வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது, முக்கியத்துவமானது. நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி, டிசம்பர், 31ம் தேதி துவங்கி, ஜனவரி, 20ம் தேதி வரை நடக்கிறது. ஜனவரி, 11ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதையொட்டி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அரசு தலைமை கொறடா மனோகரன், டி.சி., அபினவ்குமார், மேயர் ஜெயா, கோவில் இணை கமிஷனர் கல்யாணி, அறங்காவலர் குழுவினர் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறுகையில், ""51 இடங்களில் குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டி வைப்பது. ஏழு இடங்களில் தற்காலிக பொதுகுடிநீர் குழாய் அமைப்பது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக நவீன கழிவறை கூடங்கள் அமைப்பது. இரண்டு இடங்களில் மொபைல் டாய்லட் வைப்பது. ஜனவரி, 10, 11, 12 ஆகிய மூன்று நாள் மருத்துவமுகாம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வி.ஐ.பி., பாஸ் கிடையாது. நான்கு நாட்கள் ஸ்ரீரங்கம் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் வழியாக இரண்டு இலவச பஸ் இயக்கப்பட்டது. அதேபோல, நடப்பாண்டு, மூன்று இலவச பஸ் இயக்கப்பட உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் சிறப்பு கவுன்டர் அமைப்பது. அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கத்தில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தொடர்ந்து பொங்கல் உள்ளிட்ட பண்டிகை விடுமுறை வருவதால், ஏழு லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ள மருத்துவம், தீயணைப்பு, போலீஸ், மின்சாரம் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.