அய்யப்பன் சேவையில் அதிவிரைவு படை அழுக்கு விளக்கை "ஜொலிக்க வைத்தனர்!
சபரிமலை: சபரிமலை சேவையில், மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில் பாதுகாப்பு பணியில், சில ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கோவிலின் பாதுகாப்பு பணிகள் மட்டுமல்லாமல், கூட்டத்தை கட்டுப்படுத்துவது, 18 படியில் பக்தர்களை ஏற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர். சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தொடங்கப்பட்டுள்ள, "புண்ணியம் பூங்காவனம் திட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு, தினமும் ஒரு மணி நேரம் குப்பைகளை அள்ளுகின்றனர். சன்னிதானத்தின் முன்புறம், அடுக்கு விளக்கு உள்ளது. கார்த்திகை தீபம், மண்டல பூஜை, மகரவிளக்கு போன்ற முக்கியமான நாட்களில், இந்த விளக்கு ஏற்றப்படும். அழுக்கடைந்திருந்த இந்த விளக்குகளை, நேற்று, மத்திய அதிவிரைவு படையினர் கழற்றி, எலுமிச்சை, தேங்காய் நார் உதவியால், ஒரு மணி நேரம் சுத்தம் செய்தனர். "இதுபோன்ற பணிகளை, சபரிமலையில் செய்ய வாய்ப்பு கிடைத்தது, மிக பெரிய பாக்கியம்; இது அய்யப்பனுக்கு செய்யும் சேவை என, அவர்கள் தெரிவித்தனர்.