பரமக்குடியில் மழை வேண்டி நந்திக்கு வருண ஜெபம், ஹோமம்
பரமக்குடி பகுதியில் பருவமழை பெய்யாததால் கண்மாய்கள், குளங்கள், வைகை ஆறு உள்பட அனைத்து நீராதாரங்களும் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக மழை வேண்டி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி 11 சிவாச்சாரியார்கள் இடுப்பு அளவு தண்ணீரில் நின்று வருண ஜெபம் செய்யும் வழிபாடு நடைபெற்றது. மேலும் ஸ்ரீ சுந்தரேசுவரருக்கு 11 சிவாச்சாரியார்கள் ஏகாதசருத்ர அபிஷேகமும் செய்தனர். இவ்வழிவாடு வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு தனுசு லக்கிணத்தில் வருண ஜெபம் பூஜை துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுந்தரேசுவரருக்கு ஏகாதசருத்ர ஜெபம், ஏகாதசருத்ர ஹோமம், ஏகாதசருத்ர அபிஷேகமும் நடைபெற்றது. பிற்பகல் 2.00 மணிக்கு வருண ஜெப ஹோம பூர்ணாஹூதி மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.