காங்கயம் சிவன்மலை முருகன் கோயிலில் சாய்வு தளம் அமைக்கக் கோரிக்கை
காங்கயம் சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலை தமிழக அரசு சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தினசரி வந்து செல்கின்றனர். இதில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்ய அடிக்கடி வருகின்றனர். ஆனால், மற்ற கோவில் உள்ளதுபோல் இங்கு எளிதில் இவர்கள் சாமி தரிசனம் செய்ய போதிய வசதி இல்லாதால், மிகவும் சிரமப்பட்டு படிகளில் தடுமாறி ஏறி, சாமி தரிசனம் செய்து வருவது பொதுமக்களை வேதனையடையச் செய்கிறது. இதுகுறித்து, கோபியைச் சேர்ந்த 90 வயது முதியவர் பழனி கூறியது: எனக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. இதனால் கோயில் படிகளில் ஏறி சாமி தரிசனம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. பழனி போன்ற கோவில்களில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் செல்ல பேட்டரி கார்கள், வீல் சேர்கள் உள்ளன. பல கோவில்களில் சக்கர நாற்காலிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர். அதை எங்களை போன்றவர்கள் பயன்படுத்தி எளிதில் சாமி தரிசனம் செய்து வருகிறோம். ஆனால், புகழ் பெற்ற சிவன்மலை சுப்ரமணியசாமி கோயிலில் இந்த வசதி இல்லாததால், எங்களை போன்றவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறோம். இங்கு சக்கர நாற்காலிகளை கொண்டு செல்லும் வகையில் சாய்வு பாதை இல்லாமல், படிகள் மட்டுமே உள்ளது. இதனால் நாங்கள் சக்கர நாற்காலி கொண்டு வந்தாலும் அதனால் பயன் இல்லை.