சிறப்பு வழி தரிசனம் டிக்கெட் தராமல் வசூல்: மருதமலை பக்தர்கள் வேதனை!
கோவை: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு வழியில் சுவாமியை தரிசனம் செய்ய நுழையும் பக்தர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு, டிக்கெட் வழங்காமல் நூதனமான முறையில் கோவில் பணியாளர்கள் மோசடி செய்கின்றனர். இதனால், மாதந்தோறும் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று பக்தர்கள் கவலை தெரிவித்தனர். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. அன்றாடம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் விழா நாட்களில் பல ஆயிரம் பக்தர்களும் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனமும், சிறப்பு வழியில் சுவாமியை எளிதாக தரிசிக்க ரூ. 20 கட்டணம் கோவில் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதற்கான எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் "பிரின்ட் செய்யப்பட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பக்தர்களும் இந்த டிக்கெட்டை பெற்றுக்கொண்டு, அதன் பின்பே கருவறை முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் நுழைய வேண்டும். ஆனால், அந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
சிறப்பு வழி தரிசனத்தில் சுவாமியை விரைவாக தரிசித்து விட்டு, வெளியேற வேண்டும் என்று நினைக்கும் பக்தர்கள், சிறப்பு நுழைவு கட்டண மையத்தில் விற்பனை செய்யப்படும் டிக்கெட் வாங்க வருகின்றனர். அங்குள்ள கோவில் பணியாளர் ரூ. 20 பெற்றுக்கொண்டு,அனுப்பி வைக்கிறார். காசு கொடுப்பதை பார்த்து சோதிக்க, இரண்டு பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இப்படி கோவில் பணியாளர்கள் இணைந்து அன்றாடம் சிறப்பு வழி தரிசன டிக்கெட் வழங்காமல், கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். விடுமுறை நாட்களில் பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு மருதமலைக்கு வருகின்றனர். ஒரு நபருக்கு ரூ.20 வீதம் வசூலித்தால் ஆயிரம் பக்தர்களுக்கு 20,000 வரை தொகை கிடைக்கும். இத்தொகையை கோவில் பணியாளர்கள் மூன்று பேர் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதிகளவில் பக்தர்கள் வரும் நாட்களில் மட்டுமே இது போன்ற மோசடி நடக்கிறது; சாதாரண நாட்களில் செய்வதில்லை. பா.நா.புதுரை சேர்ந்த பத்ம நாபன் என்பவர் கூறுகையில்,""என்னிடமும் இதே போல் காசை பெற்றுக்கொண்டு, டிக்கெட் கொடுக்காமல் இருந்தனர். ""அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததோடு, டிக்கெட் கொடுக்காவிட்டால் அதிகாரிகளிடம் புகார் கொடுப்பதாக கூறினேன். இதையடுத்து, எனக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.
பணியிடம் காலி: ஊழியர்கள் ஜாலி.. மருதமலை கோவில் துணை கமிஷனர் பணி காலியாக இருப்பதால், அறநிலையத்துறை கோவை மண்டல இணை கமிஷனர் நடராஜன், கூடுதலாக கவனிக்கிறார். பணிப்பளு காரணமாக மருதமலை கோவிலுக்கு நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வு மேற்கொள்வதில்லை; மருதமலை கோவில் கோப்புகளை, கோவை அலுவலகத்துக்கு வரவழைத்து கையொப்பமிடுவதால், கோவிலில் என்ன நடக்கிறது என தெரியாமல் உள்ளது. விரைவில் மருதமலைக்கு துணை கமிஷனரை நியமித்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.