அன்னதான திட்ட கோவில்களில் காய்கறி தோட்டம் அமைக்க உத்தரவு!
திருப்பூர்: காய்கறி செலவை குறைக்கும் வகையில், அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கோவில்களிலும், காய்கறி தோட்டம் அமைக்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 468 கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்களின் வருவாய், பக்தர்கள் வருகை கணக்கில் கொண்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. மளிகை மற்றும் காய்கறிகளின் விலை படமடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஒரு நபருக்கு 22 ரூபாய் வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காய்கறி செலவை குறைத்து, தரமான காய்கறிகளை பயன்படுத்தும் வகையில், ""அன்னதானம் நடக்கும் அனைத்து கோவில்களிலும் காய்கறி தோட்டம் கட்டாயம் அமைக்க வேண்டும் என, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறநிலைய துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவு : அன்னதான திட்டம் நடக்கும் அனைத்து கோவில்களில் , சொந்த விவசாய நிலங்கள் இருந்தால், காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும்; சொந்த நிலம் இல்லாத கோவில்கள், அருகிலுள்ள கோவில்களிலிருந்து நிலம் பெற்று, காய்கறி மற்றும் வாழை பயிர் செய்ய வேண்டும். அருகருகே, கோவில்கள் இருந்தால், மூன்று கோவில்களை இணைத்து பெரிய அளவில் தோட்டம் அமைக்கலாம்; இரண்டு மாதத்திற்குள் தோட்டம் தயாராகும் வகையில், அனைத்து கோவில் செயல் அலுவலர்களும் முனைப்பு காட்ட வேண்டும். அன்னதான தோட்டத்தில் விளையும் காய்கறிகளை மட்டுமே இனிமேல் பயன்படுத்த வேண்டும்,. இவ்வாறு கமிஷனர் கூறியுள்ளார்.