கோவில் அருகே படமெடுத்து ஆடிய நல்லபாம்பு: பரிகார பூஜை செய்ய ஏற்பாடு!
போச்சம்பள்ளி: கோவில் அருகே, நேற்று காலை, நாகபாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியதால், பெண்கள் அருள் வந்து ஆடினர். மத்தூர் அடுத்த சிவம்பட்டியில், திருப்பத்தூர் சாலை அருகே, நூற்றாண்டு பழமை வாய்ந்த பூங்காவனத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், மாசி மாதம் நடக்கும் சிவாரத்திரி விழாவில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், மாதந்தோறும் அமாவாசை தினம் மற்றும் சிறப்பு தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். தினந்தோறும் நடக்கும் பூஜையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இக்கோவில் அருகே உள்ள நிலத்தில், பாம்பு புற்று ஒன்று உள்ளது. இந்த புற்றில் இருந்து வெளி வரும் ஒரு நாகபாம்பு கோவிலை வலம் வருவதாகவும், சில நேரங்களில் அம்மன் கருவறைக்கு சென்று அங்குள்ள அம்மன் சிலை மீது ஏறி படம் எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், அதே ஊரை சேர்ந்த சிலர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, கருவறையில் நாகபாம்பு உள்ளதையும் பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், தினந்தோறும் கோவிலுக்கு வந்து, நாகபாம்பு நடத்தும் அதிசயத்தை பார்க்க கூடியுள்ளனர். ஆனால், சில நாட்களாக யார் கண்ணுக்கும் நாகபாம்பு சிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 9 மணிக்கு கோவிலுக்கு எதிரே வந்த நாகபாம்பு அங்கு படமெடுத்து ஆடியது. இந்த பாம்பை பார்க்க வந்த பொதுமக்கள், பய பக்தியுடன் வழிபட்டனர். அப்போது, அங்கு திரண்ட பெண்களில் சிலர் அருள் வந்து ஆடினர். அவர்கள் கூறிய அருள்வாக்குப்படி, கோவில் நிர்வாகிகள், உடனடியாக கோவிலை சுத்தம் செய்து, பரிகார பூஜைகள் செய்ய தேதியை குறித்தனர். இதனிடையே கோவில் எதிரே படம் எடுத்து ஆடி பாம்பு கோவிலை சுற்றி வந்து, காணாமல் போனது.