ஹஜ் புனித யாத்திரைக்கு பாஸ்போர்ட் அவசியம்!
கோவை: செல்லத்தகுந்த பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மட்டுமே நடப்பாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பிக்க முடியும். கடைசி நேர ஏமாற்றத்தை தவிர்க்க யாத்ரீகர்கள் முன்னரே பாஸ்போர்ட் பெற்று பயனடையலாம், என, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய "ஹஜ் கமிட்டி முடிவின்படி, செல்லத்தகுந்த பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் மட்டுமே இவ்வாண்டுக்கான "ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பிக்க முடியும். கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த "ஹஜ் பயணிகள், 2014 "ஹஜ் புனித பயண அறிவிப்பு வெளியாவதற்கு முன் பாஸ்போர்ட் பெற்று கொள்ளலாம். 2014 "ஹஜ் புனித பயணத்து விண்ணப்பிப்போர், தங்களது பாஸ்போர்ட்டில்"விசாவுக்கென அடுத்தடுத்து இரண்டு காலி பக்கங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். "ஹஜ் புனித பயண அறிவிப்புக்கு பின், பாஸ்போர்ட் பெற அதிக எண்ணிக்கையில் பயணிகள் விண்ணப்பித்தால், பாஸ்போர்ட் பெற காலதாமதம் ஏற்படும்; கடைசி நேரத்தில் சிலர் பெற முடியாத நிலை கூட ஏற்படலாம். இதை தவிர்க்க, www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்; கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் அனுமதி பெற்று, தங்களின் (application receiptregistration number) விண்ணப்பங்களை அவிநாசி ரோடு,"சிட்ரா பகுதி அருகேயுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில், நேர்காணலில் பங்கேற்கும்போது சமர்பிக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளின் நற்சான்று உள்ளிட்ட துறைரீதியாக மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைகளுக்கு பின், விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.