11.12.13 இன்று அதிர்ஷ்ட நாள்!
கன்னியாகுமரி: இன்று (11.12.13) அபூர்வ தேதி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூற்றாண்டில் 11.12.13 என அடுத்தடுத்த தொடர் எண்களை கொண்டதாக இன்றைய நாள் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம். இன்றைய தினத்தை மிகவும் ராசியான, அதிர்ஷ்டமான நாளாக கருதி, உலகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடக்க உள்ளன. இதனால் திருமண மண்டபங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த சிறப்பு நாளை வரவேற்க, பலவித கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகூர்த்த தினம், நல்ல நேரம், காலம் பார்த்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் கலாசாரத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களும், இந்த நாளில் திருமணம் செய்வதை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். அதனால் 11ம் தேதிக்கு பின் நடத்த இருந்த திருமணங்களையும், இதே நாளில் செய்து கொள்ள பலர் முடிவு செய்துள்ளனர். இதனால் முகூர்த்த பத்திரிகை அச்சிடுபவர்களும் படு பிசியாக உள்ளனர். கடந்த ஆண்டு 10.11.12 அன்று திருமணம் செய்து கொண்ட நாகர்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் தம்பதிகள் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இத்தகைய அரிய நாட்களில் இணைவது சிறப்பானது மட்டுமின்றி, மறக்க முடியாதது என்றும் தெரிவித்தார். கன்னியாகுமரியை சேர்ந்த எண் கணித ஜோதிடர் ரகுனாத பண்டிதர் கூறுகையில், 11.12.13 என்ற தொடர் எண்கள் கொண்ட அன்றைய தினம், காதலர்களுக்கும், திருமணம் செய்பவர்களுக்கும் மிக சிறப்பான நாளாக அமையும் என்கிறார். இதனிடையே நாகர்கோவிலில் உள்ள பல குழந்தை பேறு ஆஸ்பத்திரிகளில் இன்று குழந்தைகள் பிறக்க பல பெற்றோர்கள் நாள் குறித்துள்ளனர்.