சிவன்கோயில் தேர் நிறுத்தத்திற்கு ரூ.8 லட்ச ரூபாய் செலவில் நிரந்தர செட்!
தூத்துக்குடி: ஒவ்வொரு தேரோட்டத்திற்கும் தற்காலிக செட் அமைக்க சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வருவதால் நிரந்தரமாக தேருக்கு செட் 8 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இன்னும் 15 நாளில் நிரந்தர செட் அமைக்கப்பட்டு விடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கோயிலான சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் பெரிய அளவில் நடந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உண்டியல் வருவாயும் ஒவ்வொரு முறை எண்ணும் போதும் அதிகமாகி வருகிறது. கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் போன்றவை அனைத்தும் நன்கொடையாளர்கள் மூலம் தான் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்காக அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் கோயிலில் உள்ள தேர் செட் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் தேர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கொண்டிருந்தது குறித்து பக்தர்கள் வேதனை வெளியிட்டனர். பக்தர்களின் வேதனை குரல் தினமலரில் செய்தியாக வெளியாகியது. இது சம்பந்தமாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது; தூத்துக்குடி சிவன் கோயிலில் நடக்கும் சித்திரை மற்றும் ஐப்பசி திருவிழாக்களின் போது ஆண்டுக்கு இரண்டு முறை சின்ன தேர் ஓட வேண்டியுள்ளது. சித்திரை தேரோட்டத்தின் போது விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரும், ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டத்தின் போது பாகம்பிரியாள் அம்மனும் இந்த தேரில் வீதி உலா வருதல் நடந்து வருகிறது. தேரோட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர் பாதுகாப்பாக நிற்கும் பொருட்டு தற்காலிக செட் அமைக்கப்பட்டு வந்தது. இந்த செட்டிற்காக ஒவ்வொரு முறையும் சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்தது. ஆண்டுக்கு இதுபோன்ற செலவுகளுக்கு மட்டும் சுமார் 75 ஆயிரம் செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆண்டுதோறும் நடக்கும் வீண் செலவுகளை தடுக்கும் பொருட்டு சிறிய தேருக்கு நிரந்தரமாக செட் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நன்கொடையாளர் மூலம் 8 லட்ச ரூபாய் செலவில் நிரந்தர செட் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு புறமும் பில்லர் அமைத்து செட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மன் செல்லக் கூடிய சித்திரை திருவிழா தேரோட்ட பெரிய தேருக்கும் நிரந்தரமாக செட் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.