உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடுதலாக 32 இடங்களில் கண்காணிப்பு கேமரா!

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடுதலாக 32 இடங்களில் கண்காணிப்பு கேமரா!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பாதுகாப்புக்காக, கூடுதலாக 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ராஜகோபுரத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆண்டாள் கோயில் நுழைவு வாயில், கொடி மரம், வடபத்ரசாயி கோயில் நுழைவு வாயில், ராஜகோபுரம் உட்பட எட்டு இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை கோயில் செயல் அலுவலரின் கண்காணிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில், அறநிலையத்துறை ஆணையாளர் தனபால், கடந்த சில மாதங்களுக்கு முன், கோயிலை ஆய்வு செய்து, கூடுதல் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டார். கடந்த சில நாட்களாக, ராஜகோபுரம் நுழைவு வாயில், ஆடிப்பூர மண்டபம், நந்தவனம், ஆண்டாள் கோயில் சன்னதி கடை வீதி, ஆண்டாள் கோயில் நுழைவு வாயில், கொடிமரம், சுற்று பிரகாரங்கள், கண்ணாடி மாளிகை முன்புறம், வெள்ளிக்கிழமை குறடு, சக்கரத்தாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி படிக்கட்டுகள், பகல் பத்து மண்டபம் உட்பட கூடுதலாக, 32 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. மேலும், "டிவிக்கள் தக்கார் அறை, செயல் அலுவலர் அறை, போலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தக்கார் ரவிச்சந்திரன் கூறுகையில்,""ஆண்டாள் கோயில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும் இக்கேமராக்கள் எதிர் எதிரே வைத்துள்ளதால் கோயிலுக்குள் வருபவர்களின் முகம் தெளிவாக தெரியும். இதன் மூலம் கோயிலின் அனைத்து பகுதிகளும் போலீசாரின் கண்காணிப்பிற்குள் வந்து விடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !