உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்கோயில் தேருக்கு செட் அமைக்கும் பணிதொழிலாளர்கள் தீவிரம்

சிவன்கோயில் தேருக்கு செட் அமைக்கும் பணிதொழிலாளர்கள் தீவிரம்

தூத்துக்குடி: தினமலர் செய்தி எதிரொலியால் தூத்துக்குடி சிவன் கோயில் தேருக்கு செட் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. தொழிலாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி சிவன் கோயிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவின் போது விநாயகர், சுப்பிரமணிய சுவாமிகள் செல்வதற்கும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் போது பாகம்பிரியாள் அம்மன் செல்வதற்கு உரிய தேர் தேரடியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேருக்கு தற்காலிக செட் அமைத்து பாதுகாப்பு செய்ய வேண்டியிருந்தது. இதற்காக சுமார் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேருக்கு நிரந்தர செட் அமைப்பது குறித்து தேர் திருப்பணி கமிட்டி தலைவர் ஏ.வி.எம். மணி, கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் பலர் நன்கொடையாளர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில் தேர் செட் இல்லாமல் நிற்பதால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனைப்பட்டனர். இது குறித்து தினமலரில் செய்தி வெளியாகியது. தினமலர் செய்தியை தொடர்ந்து தேருக்கு நிரந்தர செட் அமைப்பது குறித்து விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று தேருக்கு நிரந்தர செட் அமைப்பதற்கு நான்கு புறமும் கம்பிகள் நிறுத்தம் செய்து தேரை முழுமையாக மூடி பாதுகாக்கும் வகையில் செட் போடும் பணி துவங்கியது. இந்த பணிகள் இன்னும் இரண்டு நாளில் முடியும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். நேற்று பணிகள் நடப்பதை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் ஆகியோர் பார்வையிட்டனர். கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !