மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஜன.,30ல் கொடியேற்றம்!
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, வரும் ஜன.,30ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலின் சிறப்பே ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் திருவிழாதான். இந்த ஆண்டு குண்டம் திருவிழா, வரும் ஜன.,30ம் தேதி கொடியேற்றுதலுடன் தொடங்கி, பிப்.,17 ம்தேதி வரை நடக்கிறது. விழா வை முன்னிட்டு, பிப்.,12ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை, தினமும் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். நிகழ்ச்சிநிரல்: ஜன.30ம் தேதி காலை 8.30 மணிக்கு கொடியேற்றமும், பிப்.12ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு மயான பூஜையும், பிப்.13ம் தேதி காலை 8.00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், அன்று மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும், பிப்.14ம் தேதி காலை 10.00 மணிக்கு குண்டம் கட்டுதலும், மாலை 6.00 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. அம்மன் திருவீதி உலாவும் குண்டம் பூ வளர்த்தலும், இரவு 10.00 மணிக்கு நடக்கிறது. பிப்.15ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதல், பிப்.16ம் தேதி காலை 8.00 மணிக்கு கொடி இறக்குதல், காலை 9.00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8.00 மணிக்கு மகாமுனி பூஜை, 17ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. இத்தகவலை, கோவில் உதவி ஆணையாளர் அனிதா தெரிவித்தார்.