ஆடல் வல்லானுக்கு நாளை மகா அபிஷேகம்
ADDED :4356 days ago
அவிநாசி : ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா மஹா தரிசன பெருவிழா நாளை நடக்கிறது. நடராஜ பெருமானுக்கு 108 வகைகளில், மகா அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அதிகாலை 3.00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், அன்னம், பஞ்சகவ்யம், அருகம்புல், திருமஞ்சனம், சுக்குப்பொடி, வெள்ளரிப்பழம், நெல்பொரி, அன்னாசி, பன்னீர், ஜவ்வாது, சந்தானாதி தைலம், சங்கு, சொர்ணம் உள்ளிட்ட 108 வகை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோவில் வெளிப்பிரகாரத்தில், மேற்கு பகுதியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை துவங்கும் அபிஷேகம், காலை 6.00 மணிக்கு நிறைவடையும். அலங்கார தீபாராதனைக்கு பின், கோவில் முன் பட்டி சுற்றும் நிகழ்ச்சிக்கு பின், ரத வீதிகளில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை, காடாம்பாடி ஐநூற்று கொங்கு செட்டிமார் தர்மபரிபாலன சபையினர் செய்துள்ளனர். தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை திருவாதிரை வழிபாட்டை (மாங்கல்ய நோன்பு) முன்னிட்டு, கிளி வாகனத்தில், கருணாம்பிகை அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.