உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

தேனி தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

உத்தமபாளையம்: தேனி, சின்னமனூர், உத்தமபாளையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நேற்று இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. சின்னமனூர்: சின்னமனூர் அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் பங்குத் தந்தை மைக்கேல் போதகர் தலைமையில், கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடத்தப்பட்டது. பங்கில் இருந்து ஆண்களும் பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் கிறிஸ்துமஸ் புத்தாடை அணிந்து பெருந்திரளாக கலந்து கொண்டு வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர். * உத்தமபாளையம்: உத்தமபாளையம் விண்ணரசி ஆலயத்தில் பங்குத் தந்தை பால்ராஜ் தலைமையில், இரவு 11.45 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. நள்ளிரவு 1 மணிவரை நடந்த திருப்பலியில், பங்கு மக்கள் புத்தாடை அணிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். * ராயப்பன்பட்டி: ராயப்பன்பட்டி புனித பனிமய அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை ஜோசப் அந்தோணி தலைமையில், கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் நிகழ்ச்சிகள் நடந்தன. கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அனுமந்தன்பட்டி தூய ஆவியானவர் ஆலயத்தில், பங்குத் தந்தை அந்தோணிசாமி கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டை நடத்தினார். டி. சிந்தலைச்சேரி திரு இருதய ஆலயத்தில் பங்குத் தந்தை எரோனி முத்து தலைமையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடந்தது. கிறிஸ்துமஸ் சிறப்பு வாழ்த்துச் செய்தியும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. உட்கடை கிராமங்களிலிருந்தும் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.* ஆர்.சி., தவிர சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி., பெந்தகொஸ்தே கிறிஸ்தவ சபைகளிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் பாதிரியார்கள் தலைமையில் நடைபெற்றது.* தேனியில் மதுரை ரோட்டில் உள்ள ஆர்.சி. உலக மீட்பர் ஆலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பங்குதந்தை விம்மிசார்லி, உதவி பங்குதந்தை ஜேக்கப் சிறப்பு திருப்பலி நிகழ்த்தினர். தேனி பங்கு மக்கள் ஒவ்வொரு அந்தியங்கள் சார்பாக கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி பெருவிழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக கொண்டாடினர். குழந்தை ஏசுவிடம் தங்களுடைய வேண்டுதலையும், நன்றிகளையும் தெரியப்படுத்தி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். திருப்பலி முடிவுக்கு பின் எல்லா மக்களும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைத்து தேவாலயங்களிலும் உலக சமாதானம், அமைதி வேண்டி சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. சிறப்பு திருப்பலி முடிந்ததும் மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டவர்கள், ஏழை எளியவர்களுக்கு ஆடை, இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அனைத்து ஆலயங்களிலும் இரவு 11.45 மணிக்கு துவங்கிய கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் நள்ளிரவு 1 மணி வரையில் நடந்தது. இன்று (25.12.2013) காலை 8 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் மீண்டும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !