பழநி பாதயாத்திரை பக்தர்களின் கால்களை பதம் பார்க்கும் ரோடுகள்!
பழநி: ஒட்டன்சத்திரம் - பழநி வரை ரோடுகள் பல இடங்களில் சேதமடைந்தும், கால்களை பதம் பார்க்கும் வகையில் கற்கள் பெயர்ந்தும், கண்ணாடி சிதறல்களும் கிடப்பதால் பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழநி கோயில் தைப்பூச விழாவிற்கு, சென்னை, மதுரை, சிவகங்கை, தேனி, திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக வருகின்றனர். திண்டுக்கல், மதுரை, கொழுமம், தாராபுரம் ரோடுகளில், ஆண்டுதோறும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். ஒட்டன்சத்திரம்- பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு, பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ரோட்டோரங்களில், கற்கள், கண்ணாடி துகள் சிதறிகிடக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், நடைபாதை அமைக்கும் பணிக்காக, ரோட்டோரங்களில் ஜல்லிகற்களை கொட்டியுள்ளனர். இதனால், பக்தர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், நடுரோட்டில் நடந்து வருகின்றனர். இவ்வாறு வருவதால் கடந்த ஆண்டுகள் போல விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, சேதமடைந்த ரோடுகளை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.