உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை வருமானம் 127 கோடி ரூபாய்: அரவணை மொத்த ஸ்டாக் 15 லட்சம் டின்!

சபரிமலை வருமானம் 127 கோடி ரூபாய்: அரவணை மொத்த ஸ்டாக் 15 லட்சம் டின்!

சபரிமலை: சபரிமலை வருமானம் கடந்த 24-ம் தேதி வரை 127 கோடி ரூபாயை கடந்தது. இது கடந்த ஆண்டை விட 21 கோடி ரூபாய் அதிகமாகும். சபரிமலையில் இந்த மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதற்கேற்ப தேவசம்போர்டின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த 24-ம் தேதி வரை மொத்த வருமானம் 127 கோடி ரூபாயை கடந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் இது 106 கோடி ரூபாயாக இருந்தது. அப்பம் விற்பனையில் ஒன்பது கோடியே 77 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏழு கோடியே 76 லட்சமாக இருந்தது. அரவணை விற்பனை மூலம் 50 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 45 கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயாக இருந்தது. காணிக்கையாக 47 கோடியே 29 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 39 கோடியே 63 லட்சம் ரூபாயாக இருந்தது. அறைகள் வாடகையில் இரண்டு கோடியே 58 லட்சத்து ஆறாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ஒரு கோடியே 52 லட்சம் ரூபாயாக இருந்தது. வாடகை வருமானம் 100 சதவீதத்தையும் விட அதிகமாகியுள்ளது. அபிஷேக கட்டணமாக ஒரு கோடியே 48 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. மண்டலசீசன் நிறைவடையும் நிøலில் ஒரு லட்சம் பாக்கெட் அப்பமும், எட்டு லட்சம் டின் அரவணையும் கையிருப்பு உள்ளது. மண்டல பூஜை முடிந்து மகரவிளக்குக்கு நடை திறக்கும் போது இது நான்கு லட்சம் பாக்கெட் அப்பமாகவும், 15 லட்சம் டின் அரவணையாகவும் அதிகரிக்கும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !