உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை: பக்தர்கள் தவிப்பு!

தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை: பக்தர்கள் தவிப்பு!

சபரிமலை: சபரிமலையில் நேற்று, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து, தீபாராதனை நடந்தது. மண்டல பூஜை தரிசனத்திற்காக, திரண்ட பக்தர்கள், காட்டிலும், ரோட்டிலும் பல மணி நேரம் பரிதவித்தனர். ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி, நேற்று பகல் 2:00 மணிக்கு பம்பை வந்தது. அங்கு பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு அளித்த வரவேற்புக்கு பின், கணபதி கோயில் முன், பக்தர்கள் தரிசனத்துக்காக, தங்க அங்கி வைக்கப்பட்டது. மாலை 3:30 மணிக்கு பெட்டியில் அங்கியை வைத்து, ஐயப்பா சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக தூக்கி வந்தனர்.மாலை 5:40 க்கு சரங்குத்திக்கு வந்த அங்கிக்கு, தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 6:15 மணிக்கு, கோயிலின் 18ம் படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் பெற்று, நடையை மூடி, அங்கியை ஐயப்பனுக்கு அணிவித்தனர். பின்னர், நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், கேரள தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், ஆணையர் வேணுகோபால், விழா ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பி.ஆர்.ஓ., முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 3 நாட்களாக, சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீசாரும், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பதால், கூட்டம், கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பம்பையிலும், சன்னிதானத்திலும் பல மணி நேரம் காத்து நிற்கும் பக்தர்கள், ஆத்திரமடைவதை தடுக்க, நிலக்கல் உட்பட பல இடங்களில், 8 மணி நேரம் வரை வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !