சபரிமலை மண்டல காலம் நிறைவு: டிச., 30ல் மீண்டும் நடைதிறப்பு!
சபரிமலை: சபரிமலையில் "மண்டல காலம், நேற்று நடந்த மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இனி, மகர விளக்குக்காக, டிச., 30 மாலை, மீண்டும் நடை திறக்கப்படும். சபரிமலையில் "மண்டல காலத்தின் கடைசி மூன்று நாட்கள், பக்தர்கள் கூட்டம் அதிகம். நேற்று காலை 8 மணிக்குப் பின், கூட்டம் குறைந்தது. அதன் பிறகே போலீசார் நிம்மதி அடைந்தனர். நேற்று காலை 11 மணிக்கு, நெய் அபிஷேகம் நிறுத்தப்பட்டதும், கோயில் சுற்றுப்புறம் சுத்தப்படுத்தப்பட்டு, முன்புறம் உள்ள மண்டபத்தில், தந்திரி கண்டரரு மகேஷ் வரரு "களபபூஜை நடத்தினார். பின், பிரம்மகலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, அதை எடுத்து கோயிலை வலம் வந்தார். ஐயப்பனின் மூலவிக்ரகத்தில் களப அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடந்தது. தந்திரி கண்டரரு மகேஷ்வரரு, தீபாராதனை நடத்தி பூஜையை நிறைவு செய்தார். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை தீபாராதனை நடந்தது. "அத்தாழ பூஜை க்கு பின், இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல், டிச., 30 மாலை வரை, பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியாது; அன்று மாலை 5.30 மணிக்கு நடை திறந்ததும், "மகரவிளக்கு காலம் தொடங்கும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு, நடை திறந்ததும் நெய் அபிஷேகம் தொடங்கும். ஜன.,14 ல், "மகர விளக்கு பெருவிழா நடக்கிறது.