உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்கு சொந்தமான 450 ஏக்கர் நிலம் மீட்கும் பணி

கோவிலுக்கு சொந்தமான 450 ஏக்கர் நிலம் மீட்கும் பணி

பல்லடம்: கோவிலுக்கு சொந்தமான, 450 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணியில்,அறநிலைத்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். பல்லடம் அருகே மாதப்பூரில் முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு மன்னர்களால், 450 ஏக்கர் நிலம், மாதப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. 148 ஏக்கர் நிலம் நேரடியாக கோவிலுக்கும், 302 ஏக்கர் நிலம் கோவிலுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் கூறியதாவது: மன்னர்கள் காலத்தில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு 450 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதில், 148 ஏக்கர் நிலம் நேரடியாக கோவிலுக்கும், 302 ஏக்கர் நிலம் ஊழியம் செய்பவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஊழியம் செய்து வந்தவர்கள், தங்களுடைய நிலங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். தற்போது, யாரும் கோவிலுக்கு ஊழியம் செய்யவில்லை விற்பனை செய்யப்பட்ட நிலம், ஆக்கிரமிப்பு நிலங்கள் ஆகியவற்றை கண்டறிந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கோவிலுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது, 100 ஏக்கர் நிலங்களின் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வகைபடுத்தப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.350 கோடி. நிலங்கள் ஒரு மாதத்துக்குள் மீட்கப்படும். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக, பட்டா மாறுதல் செய்யப்பட்ட இனங்கள் மீது டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., விசாரணை முடிவுக்கு பின், விரைவில் மீட்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !