உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருண்டை சாப்பிட்ட பெரியவர்!

உருண்டை சாப்பிட்ட பெரியவர்!

காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்தில்  முகாமிட்டிருந்தார். அப்போது ஒரு மூதாட்டி வந்தார். பெரியவா! என் கணவர் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார். என் மகளை நல்ல இடத்தில்  கல்யாணம் செய்து கொடுத்து விட்டேன். வருங்காலத்தில் என் சொத்தையெல்லாம், தர்ம காரியங்களுக்கு செலவிட விரும்புகிறேன், என்றார்.  அதற்குரிய நேரம் வரும் போது, இதுபற்றி பதில் தெரிவிப்பதாக பெரியவர் பதிலளித்தார்.  கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற பெரியவர், மூதாட்டியின் நினைவு வர, மடத்திற்கு அழைத்து வரச் சொன்னார். அவரிடம், காஞ்சிபுரத்திலுள்ள சில கோயில்களுக்கு திருப்பணியும்,  வேத பாடசாலைக்கு நிதியுதவி செய்யும் படியும் கூற, அதை அந்த அம்மையார் நிறைவேற்றினார். அதன்பின், மடத்திலேயே தங்கி பெரியவரை  தினமும் தரிசனம் செய்து வந்தார். ஒருமுறை, அந்த மூதாட்டி, தான் தயாரித்த, சத்துமாவு உருண்டையை ஏற்று உண்ண வேண்டும் என பெரியவரிடம் வேண்டிக் கொண்டார். மகாபெரியவரும் மகிழ்ச்சியுடன், அதில் சிறிது மட்டும் எடுத்து உருண்டைகளாக்கி சாப்பிட்டார். மீதியை அவரிடமே கொடுத்து விட்டார்.  அன்று நாள் முழுவதும் பெரியவர் பிட்சை ஏற்கவில்லை.  பெரியவரின் வழக்கத்திற்கு மாறான இந்தச் செயல் மடத்திலுள்ள ஊழியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஊழியர் மட்டும் பெரியவர் அருகே சென்றார்.  அப்போது, பெரியவர் , சிறு சிறு உருண்டை களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  இதைக் கண்ட ஒரு ஊழியர், பெரியவா! இன்னுமா அந்த சத்துமாவை சாப்பிடுறீங்க! எனகேட்டார்.  டேய்! சத்துமாவு ருசியாக இருந்தது. அதனால், அதை விரும்பி சாப்பிட்டேன். ஆனா, நாக்கு கேட்கும் போதெல்லாம் ருசியானதை சாப்பிட்டு கிட்டே இருக்கக்கூடாது. அதனாலே, அந்த ருசியை மாற்றக்கூடிய வகையிலே, சாண உருண்டையை சாப்பிட்டேன். சாண உருண்டை சாப்பிட்டா, எதையும் சாப்பிடத் தோன்றாது. சாப்பிட்ட உணவும் செரித்து விடும் என்றார்.  உணவு விஷயத்தில், மனிதர்கள் நாக்கைக்  கட்டுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்ல. பசுஞ்சாணத்தின் மகத்துவத்தையும் மக்களுக்கு அவர் போதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !