உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகுதி கடலுக்குள் திருவள்ளுவர் சிலை அமைந்து 14-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சிலை பாதத்தில் தமிழ் அமைப்புகள் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கன்னியாகுமரியில் கடல் நடுவில் சிலை அமைக்க எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரத்தை குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் இந்த சிலை கம்பீரமாக காட்சி தருகிறது. 2000-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி இதனை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசி உப்புகாற்றிலிருந்து இந்த சிலை பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிலை அமைத்து 14-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வாளர் பத்மனாபன் தலைமையில் விவேகானந்தா கேந்திரா துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், சுவாமி தோப்பு பாலபிரஜாதிபதி அடிகள், தியாகி முத்துக்கருப்பன், பேராசிரியர் ஆபத்துகாத்தபிள்ளை, காமராஜர் நற்பணி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம.எல்.ஏ., பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !