உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகள் துவக்கம்

கோட்டை பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு ஏற்பாடுகள் துவக்கம்

ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் பணி ஜரூராக நடக்கிறது. ஈரோடு கேட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், ஜனவரி, 11ம் தேதி அதிகாலை, 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டுதோறும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, தரிசனம் மேற்கொள்வது வழக்கம். மூன்று நாட்களே உள்ள நிலையில், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக, தடுப்பு கட்டைகள் வைத்து, வரிசை படுத்துதல், நடைமேடை அமைக்கும் பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை, 5 மணிக்கு, சுவாமிக்கு நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்), சனிக்கிழமை அதிகாலை, 2.45 மணிக்கு, கஸ்தூரி அரங்கநாதருக்கு திருமஞ்சனமும், மஹா தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது. காலை, 4.30 மணிக்கு சொற்கவாசல் திறப்பும், சுவாமி திருவீதி உலாவும் நடக்க உள்ளதாக, செயல் அலுவலர் விமலா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !