திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 5.5 டன் பூக்கள் மாலைகளாக அனுப்பி வைப்பு!
சேலம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலத்தில் இருந்து, ஐந்தரை டன் பூக்கள், திருப்பதி திருமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதி திருமலையில், ஸ்ரீவாரி வைகுண்ட ஏகாதசி வைபவம், நாளை அதிகாலை நடக்கிறது. இதற்காக, சேலம், பக்திசாரர் பக்த சபா சார்பில், பூக்களை அனுப்பும் பணி நேற்று நடந்தது. சேலம், சீரங்கபாளையத்தில் உள்ள டி.ஆர்.எஸ்., திருமண மண்டபத்தில், பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 800 பெண்கள் பங்கேற்று மேரிகோல்டு சிகப்பு, மேரிகோல்டு மஞ்சள் நிற பூக்களை மாலைகளாக கட்டினர். மூன்று டன் பூக்கள், இரண்டு பெரிய வாழை மரங்கள், 15 நார் கட்டுகள், திருப்பதி திருமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.* திருமலை திருவேங்கடமுடையான் நிஷ்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், கொண்டலாம்பட்டி, தேவாங்க மகாஜன சமுதாயக்கூடத்தில், பூக்களை மாலைகளாக தொடுக்கும் பணி நடந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, சாமந்தி, அரளி, மருகு, மரிக்கொழுந்து, தாமரை, துளுக்க சாமந்தி, சம்பங்கி போன்ற மணமுள்ள பூக்களை, மாலைகளாக கட்டி, திருப்பதி திருமலைக்கு அனுப்பி வைத்தனர்.