விவேகானந்தர் பிறந்த நாள் விழா 150ம் ஆண்டு விழாக் குழு ஏற்பாடு!
புதுச்சேரி: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நிறைவு விழா, வரும் 12ம் தேதியன்று, கடற்கரையில் நடக்கிறது. இதுகுறித்து, சுவாமி விவேகானந்தர் 150ம் ஆண்டு விழாக் குழுவின் தலைவர் செல்வகணபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா, கடந்த ஓராண்டாக, கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா, வரும் 12ம் தேதியன்று, புதுச்சேரி கடற்கரையில் நடக்க உள்ளது. காலை 9:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணி வரை, நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விவேகானந்தரின் சிலைக்கு, முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், வாரியத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் மலரஞ்சலி செலுத்துகின்றனர். நாள் முழுவதும், விவேகானந்தரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் பஜனை, பக்தி இசைக் குழுவினர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, புகைப்பட கண்காட்சி, சிறப்பு சொற்பொழிவு, புதுச்சேரி ஜேசி சார்பில், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று மேடை நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விவேகானந்தரின் பிறந்த நாளான, வரும் 12ம் தேதியன்று, வீடுதோறும் அவரது படத்தை அலங்கரித்து, புஷ்பாஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்களது வீடுகளில் புஷ்பாஞ்சலி செய்ய விரும்புவோர், விவேகானந்தரின் படத்தை இலவசமாக பெற்றுக் கொள்ள, 73738 70696, 99408 95150 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.சிகாகோ நகரில், நமது பண்பாடு, கலாசாரம், வேதாந்தம் போன்றவற்றை புகழ்ந்து, சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரையை நினைவுபடுத்தும் வகையில், இந்த விழாவை, சுற்றுலாத் துறையுடன் இணைந்து, 150ம் ஆண்டு விழாக் குழு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு செல்வகணபதி கூறினார்.விழாக் குழு உறுப்பினர்கள் சீனுமோகன்தாஸ், ராஜாராம், கணேஷ், பாலாஜி, ரவிச்சந்திரன், ராமன், சீனுவாசன் உடனிருந்தனர்.