காவிரியில் தைப்பூச பெருவிழா தீர்த்தவாரி
கும்பகோணம்: திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோவில் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, காவிரியில் நேற்று நடந்த தீர்த்தவாரியின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே, திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீன கோவில்களுள் ஒன்றான, பழம்பெருமை வாய்ந்த மகாலிங்க ஸ்வாமி கோவில் உள்ளது. செண்பகராண்யம், இடைமருது உள்பட, 12 பெயர்கள் கொண்ட இத்திருதலத்தில், காருண்யாமிருத தீர்த்தம் உள்பட, 32 தீர்த்தங்கள் உள்ளன. காருணியாமிருத தீர்த்தத்தில் நீராடுவோர், கங்கையில் நீராடிய பயனை விட, மேலான பயன் பெறுவர் என்பதும், காவிரியின் கலியாண தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர் என்பதும் ஐதீகம். இந்த ஆண்டுக்கான தைப்பூச புனித நீராடல் விழா, கடந்த மாதம், 30ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு துவங்கியது. கடந்த, 7ம் தேதி முதல், தினமும் ஸ்வாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்வான தைப்பூச தீர்த்தவாரி வைபவம், நேற்று நடந்தது. நேற்று காலை, வெள்ளி ரிஷபவாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து, காவிரி படித்துறையில் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில், அஸ்திரதேவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காவிரியில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.