காணும் பொங்கல் விழா: திருத்தணி முருகப்பெருமான் திருவீதியுலா!
திருத்தணி: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான், திருத்தணியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் நேற்று காலை, 6:00 மணிக்கு படிகள் வழியாக, சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவ பெருமான் எழுந்தருளினார். பின்னர், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு திருத்தணி பகுதி சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து (இழுத்து) சென்றனர். மாலை, 5:30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றார்.