பழநி தைப்பூச தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்!
பழநி: பழநியில் தைப்பூச விழாவை முன்னிட்டு, மலைக்கோயிலில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். பாதயாத்திரைக்கு பெயர் பெற்ற, பழநி தைப்பூச விழா ஜன., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாணம். இதை தொடர்ந்து வெள்ளி தேரில் வள்ளிதெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலையில் நடந்தது. இதையடுத்து அதிகாலை 4 மணிக்கே, மலைகோயில் சந்நிதி திறக்கப்பட்டது.
பக்தர்கள் கூட்டம்: நேற்றுமுன்தினம் இரவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக பழநிக்கு வந்திருந்த பக்தர்கள் அடிவாரம் பகுதிகளில் குவிந்தனர். பழநி அடிவாரம், கோயில் தங்குவிடுதிகள், தனியார் லாட்ஜ்கள் அனைத்தும் நிரம்பிருந்தது. பாதவிநாயகர் கோயில், கிரிவீதிகளில் எங்கு பார்த்தாலும், மஞ்சள், காவி, பச்சை உடை அணிந்த பக்தர்களையே காண முடிந்தது. காரைக்குடி, மதுரை, திருச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், மயில்காவடி, பால்காவடி, இளநீர் காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் பால்குடங்கள் எடுத்து வந்தும், அலகு குத்தியும், கிரிவீதியை வலம் வந்து, மலைக்கோயிலுக்கு சென்றனர்.
வெளிநாட்டினர் பங்கேற்பு: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஒரே குடும்பத்தினர்களான ஸ்காட்ச், கேரி, நீக்கி, ஜாக்கி மற்றும் அவரது நண்பருடன் 5 ஆண்டுகளாக, பழநி தைப்பூசவிழாவிற்கு வருகை தருகின்றனர். அவர்கள் கூறுகையில்,பழநி தைப்பூச விழாவிற்காக, நேற்றுமுன்தினம் வந்து, சுவாமி தரிசனம் செய்தோம். பக்தர்களின், காவடியாட்டம், ஒயிலாட்டம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏராளமான போட்டோஸ் எடுத்துள்ளோம். பக்தர்கள் எளிமையாக பழகுகின்றனர், என்றனர்.
தள்ளுமுள்ளு: மலைகோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தரிசன, அர்ச்சனை, அபிஷேக, முடிக்காணிக்கை டிக்கெட்டுகள் வாங்கவும், நீண்ட வரிசை காணப்பட்டது. மலைக்கோயிலில் போதிய போலீசார் இல்லாததால், அன்னதானகூடம் மற்றும் படிப்பாதையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
அரோகரா கோஷத்துடன் தேரோட்டம்: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, சரண கோஷத்துடன், தைப்பூசத்தேரை மண் அள்ளும் இயந்திரம் மூலம், நான்கு ரதவீதிகளில் தேரோட்டம் நடந்தது. பழநி தைப்பூச விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று, அதிகாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை, விநாயகர், அஸ்த்ர தேவருடன் சண்முக நதி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். கலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது. காலை 10.30 மணிக்கு சுவாமி தேரோட்டம் நடந்தது. தேர் புறப்படும் முன் விடலை தேங்காய்களை உடைத்து, அர்ச்சனை, தீபாராதனையுடன், கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என, சரணகோஷம் எழுப்ப மாலை 4.50 மணிக்கு தேர்நிலையிலிருந்து புறப்பாடு ஆனது. நான்கு ரதவீதிகளிலும் பக்தர்கள் தேங்காய், பழங்கள் உடைத்து அர்ச்சனை செய்தனர். மாலை 6 மணிக்கு, தேர் நிலையை அடைந்தவுடன், கூடியிருந்த பக்தர்கள் கை தட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
யானைக்கு பதில் இயந்திரம்: பழநிகோயில் யானை கஸ்தூரி, கோவை மேட்டுபாளையத்தில் நடக்கும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், தைப்பூச தேரை, தள்ளிச்செல்வதற்கு, இரண்டு மண் அள்ளும், இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. பலமுறை சுட்டிக்காட்டியும் தேரோடும் ரதவீதிகள் சீரமைக்கப்படாததால், குண்டும், குழியுமான ரோட்டில், சிரமப்பட்டு பக்தர்கள் தேரை இழுத்தனர்.