தைப்பூச திருவிழா: திருத்தணியில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்!
திருத்தணி: தைப்பூசத் திருவிழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஒரு லட்சம் பக்தர்கள் வரிசையில், 4 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று தைப்பூசத்திருவிழாயொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மூலவருக்கு தங்கக்கவசம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. நண்பகல், 11:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, குதிரைவாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு தங்கத்தேரிலும் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, பொதுவழியில், நான்கு மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசித்தனர். கந்தசுவாமி கோவிலில், நேற்று காலை 6:00 மணி முதல், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரார்த்தனையாக பக்தர்கள், காவடி எடுத்து வந்தனர். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் கந்தனை தரிசித்தனர். மேலையூர் நாகபரணீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும், நேற்று தைப்பூசத்தையொட்டி கோவில்களில் உள்ள சுப்பிரமணியருக்கு, விசேஷ அபிஷேகம் நடத்தப்பட்டது.