உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் தைப்பூச திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மருதமலையில் தைப்பூச திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

கோவை: முருகனின் ஏழாவது படைவீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று தைப்பூசம் விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகபெருமானை தரிசனம் செய்தனர். கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு மகா அபிஷேகம், ராஜஅலங்காரம், உஷகால பூஜை, தீபாராதனைகள் நடந்தது. காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலசபூஜை, ஹோமம், பட்டுவஸ்திரம் சாத்துதல், தாரைவார்த்து கொடுத்தல் மற்றும் திருமாங்கல்ய தாரணம் செய்யப்பட்டது. காலை 7.20 மணிக்கு, வள்ளி,தெய்வானை உடனமர் சுப்ரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதன் பின், பெரியதேரில் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியசாமியும் திருத்தேருக்கு எழுந்தருளினார். பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கோவை கலெக்டர் அர்ச்சனாபட்நாயக், எம்.எல்.ஏ., மலரவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்களின் அரகரா கோஷம் முழங்க, திருத்தேர் கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வந்தது. கோவையில் உள்ள வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, வேலாண்டிபாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, வேலுடன், பாத யாத்திரையாக வந்து நேற்று காலை முதலே சுப்ரமணியரை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !