வள்ளலார் சித்தி வளாக திருவறை தரிசனம்: பக்தர்கள் பரவசம்!
வடலூர்: வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத் திருமாளிகையில், திருவறை தரிசனத்தை, ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், 143வது தைப்பூச விழா, கடந்த, 17ம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, மட்டுக்குப்பத்தில், வள்ளலார், சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில், திருவறை தரிசனம், நேற்று நடைபெற்றது. மீனவ சமுதாயத்தினர், காலை, 8:00 மணிக்கு, தரும சாலையில் இருந்து, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழையை, பல்லக்கில் வைத்து, வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக, மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு, ஊர்வலமாக சென்றனர். வழியில், வள்ளலார் தங்கிய, கருங்குழி இல்லம், அவர் வணங்கிய பெருமாள், பிள்ளையார் கோவில்கள், ஓடை உள்ளிட்ட இடங்களில், பல்லக்கிற்கு, மக்கள் வரவேற்பு அளித்து, ஆரத்தி எடுத்தனர். பல்லக்கு, மேட்டுக்குப்பம், வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைக்கப்பட்டு, பின், அறை திறக்கப்பட்டது. திருவறை தரிசனத்தை, ஆயிரக்கணக்கான மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். தரிசனம், மதியம், 1:30 மணிக்கு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடைபெற்றது.