நாட்டரசன்கோட்டையில்
சிவகங்கை:சிவகங்கை, நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், நகரத்தார்களின் செவ்வாய் பொங்கல் விழா நேற்று நடந்தது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், நகரத்தார்கள் வசிக்கின்றனர். ஆண்டு தோறும், தை பொங்கலுக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று, "செவ்வாய் பொங்கல் விழாவை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இப்பொங்கல் விழாவிற்காக, நகரத்தார்களிடம், குடும்பம் வாரியாக (புள்ளிகள்) 895 குடும்பத்தினரிடம், வரி வசூல் செய்திருந்தனர். நேற்று, கண்ணுடையநாயகி அம்மன் கோவில் சன்னதியில், வெள்ளி குடத்தில், குடும்ப தலைவர் (புள்ளிகள்) பெயர்களை சீட்டில் எழுதி போட்டு, குலுக்கி எடுத்தனர்.முதல் சீட்டில், ராமநாதன் செட்டியார் குடும்பத்தினர் பெயர் தேர்வானது. அக்குடும்பத்தினர், முதல் பொங்கல் வைக்க அழைக்கப்பட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு, முதல் பொங்கல் வைப்பவரின் மண் பானையில், அனைத்து நகரத்தார்களும் பால் ஊற்றி, பொங்கலை துவக்கி வைத்தனர். இதையடுத்து, மற்றவர்கள் பொங்கல் வைத்தனர். இங்கு,"வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்படும். பொங்கல் வைத்த பின், கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு சாமி புறப்பாடும் நடந்தது. வரன் தேடல்: இந்த நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் இருந்து வந்த, நகரத்தார்கள் தங்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கு, வரன் தேடும் படலத்தையும் நடத்தினர். கோயில் கவுரவ கண்காணிப்பாளர் சின்னராதா, கண்காணிப்பாளர் குமரேசன், நகரத்தார் சங்க தலைவர் ஜெகநாதன் செட்டியார், பேரூராட்சி தலைவர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.