கூரத்தாழ்வான் கோவிலில் திருத்தேரோட்டம்
காஞ்சிபுரம்: கூரம் கிராமத்தில் உள்ள, கூரத்தாழ்வான் நம்பெருமாள் கோவிலில், திருத்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்துள்ள கூரம் கிராமத்தில், கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தை மாத பிரம்மோற்சவத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், கடந்த, 13ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில், காலை, 7:00 மணிக்கு, உற்சவர் கூரத்தாழ்வான் நம்பெருமாள், திருத்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பகல், 1:00 மணிக்கு நிலைக்கு வந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஹம்ஸ வாகன உற்சவம் நடைபெற்றது. இன்று (22ம் தேதி) திருப்பல்லக்கு மற்றும் நாளை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.