ஆம்பூர் சாலையோர அம்மன் கோவில்: 10 அடி பின்னோக்கி நகர்த்தப்பட்டது!
வேலூர்: ஆம்பூர் அருகே அம்மன் கோவிலை, 10 அடி தூரம் நகர்த்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அய்யனூரில் சாலையோரம், ஆதி பெத்தபள்ளி கங்கையம்மன் கோவில் உள்ளது. சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, ஆறு வழிச்சாலையாக மாற்றப்படுவதால், இக்கோவிலை இடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதற்கு, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கோவிலை இடிக்காமல், 40 அடி பின்னோக்கி நகர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த, 3ம் தேதி முதல், அரியானாவைச் சேர்ந்த அவுஸ் லிப்டிங் சர்விஸ் இந்தியா நிறுவனம், கோவிலை நகர்த்தும் பணியில் ஈடுபட்டது. கோவிலின் கடக்காலை சிறிது, சிறிதாக உடைத்து, அதன் கீழ் பலமான ஜாக்கிகள், தண்டவாளங்கள் பொருத்தி, 10ம் தேதியன்று ஜாக்கிகளின் மீது கோவில் வைக்கப்பட்டது. அதன்பின், 40 அடி தூரத்துக்கு, நீண்ட செங்கல் ஸ்லாப்புக்கள் வைக்க, புதிய இடம் அமைத்தனர். நேற்று முன்தினம், மாலை 6 மணிக்கு, ஒரு அடி தூரம் கோவிலை நகர்த்தி சோதனை செய்யப்பட்டது. சோதனை வெற்றிக்கரமாக முடிந்ததால், நேற்று முன்தினம், ஒன்பது அடி தூரம் கோவிலை நகர்த்தினர். அரியானா நிறுவன பொறியாளர் லட்சுமணன் தலைமையில், 25 ஊழியர்கள், இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இன்னும் நான்கு நாட்களில் கோவிலை முழுமையாக நகர்த்தப்படும் என நிறுவன பொறியாளர் லட்சுமணன் தெரிவித்தார்.