சித்தலூர் பெரிய நாயகி கோவிலில் அடிப்படை வசதி ஏற்படுத்த கோரிக்கை!
தியாகதுருகம்: சித்தலூர் கோவிலில் அடுத்த மாதம் திருவிழா துவங்க உள்ளதால் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் மணிமுக்தா ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஆண்டு முழுவதும் இங்கு வருகின்றனர். இக்கோவிலில் போதிய அடிப்படை வசதிகள் இதுவரை ஏற்படுத்தவில்லை. குடிநீர், கழிவறை வசதி இன்றி பக்தர்கள் அதிகம் வரும் முக்கிய நாட்களில் கடும் அவதிப்படும் நிலை தொடர்கிறது. அடுத்த மாதம் மகாசிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கவுள்ளது. இத்தருணங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு நடத்த வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இடிந்த நிலையில் உள்ள கழிவறை கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்ட வேண்டும். ஆற்றில் நீரோட்டம் இல்லாதிதால் குடிநீர் வசதிக்காக கூடுதலாக குழாய்களை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.