உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் குண்டம் விழா : மயான பூஜை நடக்கும் இடம் மாற்றம்!

மாசாணியம்மன் குண்டம் விழா : மயான பூஜை நடக்கும் இடம் மாற்றம்!

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இடப்பற்றாக்குறையை முன்னிட்டு, இம்முறை மயான பூஜை நடைபெறும் இடம் மாற்றப்பட்டு உள்ளது. மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், மயான பூஜை வரும் 12ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. மயான பூஜையானது வழக்கமாக ஆனைமலை மயானத்தில் நடைபெறும். தற்போது அங்கு, மயானத்தை நவீன படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதனால், அங்கு போதிய இடவசதி இல்லை. மேலும், மயான பூஜைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்போது, நூற்றுக்கணக்கான பெண்களுக்கு ஒரே சமயத்தில் அருள் வந்து ஆவேசமாக ஆடுவார்கள். அவர்களை கட்டுபடுத்துவது குறுகிய இடத்தில் கடினம். அருகில் ஆறு இருப்பதால், கூட்டம் அதிகரிக்கும் போது தள்ளு முள்ளு ஏற்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழலாம். அதை தவிர்க்க, இம்முறை மயான பூஜை, அருகில் உள்ள சோமேஸ்வரன் கோவில் வளாகத்தில் நடக்க உள்ளது. இதற்காக, 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமேஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, கோவிலை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இக்கோவில் வளாகத்தில் ஈசான்ய மூலையில் 20 அடிக்கு 16 அடி பரப்பில் மேடை கட்டப்பட்டு, மயான பூஜை நடத்த தேவையான ஏற்பாடுகளை பேரூராட்சி நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !