முத்துப்பேட்டை அன்னை ஆலய திருவிழா
கீழக்கரை: முத்துப்பேட்டை காணிக்கை அன்னை ஆலய திருவிழா ஜன.,24ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ நாட்களில் தினமும் திருச்செபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. திருவிழா தினத்தன்று சிவகங்கை மாவட்ட மறை ஆயர் சூசை மாணிக்கம் புதுப்பிக்கப்பட்ட பீடப்பகுதியை அச்சிப்பு செய்து, திருப்பலி செய்தார். இரவு முக்கிய வீதிகளில் தேர் பவனி நடந்தது. ஜெபமாலை ஜெபித்து, மெழுகுதிரி ஏந்தி மாதாவுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை மெழுகுதிரி பவனியை தொடர்ந்து, பங்குதந்தைகள் அகஸ்டின் (வேளாங்கண்ணி), பன்னீர் செல்வம் (தஞ்சாவூர்) ஆகியோர்கள் புதுநன்மை பெறும் சிறுவர், சிறுமியர்களை ஆசிர்வதித்தனர். மாலையில் நற்கருணைப் பவனி நடந்தது. ஏற்பாடுகளை முத்துப்பேட்டை தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தை செபாஸ்டின், பங்குப் பேரவையினர், அன்பிய பொறுப்பாளர்கள் செய்தனர்.