விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் நாளை துவங்குகிறது கோலாகலம்!
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விருத்தாசலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. தென்னாட்டில் விருத்தகாசி என திகழ்கிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், குருநமச்சிவாயர், ராமலிங்க சுவாமிகள், சொக்கலிங்க அடிகள் முதலிய பெரியோர்களால் போற்றிப்பாடப் பெற்றது. உலகிலுள்ள பிற மலைகள் தோன்றுவதற்கு முன்னரே சிவபெருமான் இங்கு ஒரு குன்று உருவில் தோன்றி பிரம்மனுக்கு காட்சி அளித்தமையால் இத்தலத்திற்கு திருமுதுகுன்றம் அல்லது விருத்தாசலம் என பெயர் வந்தது என தலவரலாறு கூறுகிறது. உமையவள் இத்தலத்தில் இறக்கும் உயிர்களின் கர்ம பந்தங்களை நீக்குகிறாள். சிவபெருமான் பஞ்சாட்சர மந்திர உபதேசம் செய்து பிறவி துன்பங்களைப் போக்கி மோட்சத்தை கொடுக்கிறார். இத்தலத்தில் தங்கி ஈசனையும், அம்மையாரையும் வழிபட்டு பல முனிவர்களும், பெரியவர்களும் முக்தி பெற்றதாக புராணம் கூறுகிறது. மணிமுத்தாற்றில் நீராடி பழமலைநாதரை பூஜித்து குருடு, செவிடு, பிணி முதலியவற்றை நீக்கிக் கொண்டிருக்கின்றனர். திருவிழா நாட்களிலும், விசேஷ தினங்களிலும் இறைவனை வணங்கியவர்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு விரும்பிய பயனை எய்தி இன்புறுவர்.
இத்தகைய பெருமையுடைய விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் நாளை (6ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதையொட்டி, அன்று காலை 8:45 மணிக்கு மேல் 10:45 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி, இரவு ஏகாசன மஞ்சத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 7ம் தேதி காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மஞ்சம் மற்றும் பல்லக்கில் வீதியுலா, இரவு சூரிய பிரபையில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 8ம் தேதி இரவு பூத வாகனம், 9ம் தேதி நாக வாகனம், 10ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். 11ம் தேதி காலை 6:00 மணிக்கு பெரிய நாயகர், பெரிய நாயகி, இளைய நாயகி, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12:15 மணிக்கு மேல் 1:30 மணிக்குள் விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீகம் நடக்கிறது. 12ம் தேதி மாலை பிச்சாண்டவர் சுவாமி புறப்பாடு, இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 13ம் தேதி காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மஞ்சம் மற்றும் பல்லக்கில் வீதியுலா, இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 14ம் தேதி தேர்த் திருவிழாவையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் பஞ்ச மூர்த்திகள் ரதாரோகணம் செய்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி பகல் 12:00 மணிக்கு மாசிமக உற்சவம், பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதியுலா, தீர்த்தவாரி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 16ம் தேதி பகல் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு புஷ்ப வாகனத்தில் சுவாமி வீதியுலா, அம்மன் குளத்தில் அலங்கரித்த புஷ்ப பல்லக்கில் தெப்ப உற்சவம் நடக்கிறது. நிறைவாக 17ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.