உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி திரும்பியது கோவில் யானை லட்சுமி!

புதுச்சேரி திரும்பியது கோவில் யானை லட்சுமி!

புதுச்சேரி: கோவை புத்துணர்வு முகாமை முடித்துக் கொண்டு, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை "லட்சுமி நேற்று திரும்பியது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பாவானி ஆற்றுப்படுகையில், கோவில் யானைகளுக்கு, 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 யானைகள் பங்கேற்றன.முகாமில் பங்கேற்க, புதுச்சேரி மணக் குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு, தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியது. அதையொட்டி, டிசம்பர் 20ம் தேதி கோவை புறப்பட்டு சென்றது. அங்கு படு உற்சாக லட்சுமி பொழுதை கழித்தது.காலில் புண்கள் ஏற்படாமல் இருக்க பாத குளியல் அளிக்கப்பட்டது. யானைகளை கையாளும் வழிமுறைகள் குறித்து யானை பாகனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. லட்சுமியை பரிசோதித்த கால்நடை டாக்டர்கள், உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட தூரம் தினமும் வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என, அறிவுறுத்தினர். முகாமில் லட்சுமின் உடல் நலன் குறித்த ஹெல்த் கார்டும் கொடுக்கப்பட்டது. புத்துணர்வு முகாம் முடிவடைந்ததையொட்டி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, நேற்று காலை 10:00 மணிக்கு புதுச்சேரி திரும்பியது. கோவில் தேவஸ்தான அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். லட்சுமிக்கு திருஷ்டி கழிக்கப்பட்டு, சுவை மிகுந்த பழங்கங்கள் உணவாக கொடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !