திருச்செந்தூர் குமரன், தெய்வாணை புத்துணர்வு பெற்று திரும்பியது
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் யானைகளான குமரன், தெய்வவாணை புத்துணர்வு முகாமில் இருந்து திரும்பின. கோயிலில் சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் குமரன்,(11 வயது), தெய்வாணை (16 வயது) ஆகிய இரு யானைகள் உள்ளன. தமிழக அரசு கோயில்களில் உள்ள யானைகளுக்கு முதுமலையில் 45 நாட்கள் புத்துணர்வு முகாம்கள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த டிச., 17 ல் திருச்செந்தூரில் இருந்து லாரியில் புறப்பட்ட யானைகள் இரண்டும், டிச., 19 ம் தேதி முதல் புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டன. யானைகளுடன் அதன் பாகன்கள் ராதாகிருஷ்ணன், உதயக்குமார். செந்தில்குமார், ராஜேஸ்குமார், பிரவீன்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர். 45 நாட்கள் பயிற்சிக்கு பின் இரு யானைகளும் நேற்று காலை திருச்செந்தூருக்கு வருகை தந்தது. யானைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தி வரவேற்பு வழங்கினர்.யானைகள் வருகை தந்தவுடன் மாசித் திருவிழாவிற்கான கொடிப்பட்ட வீதியுலா நடந்தது. யானை பாகன் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,""அரசு வழங்கும் முகாமில் யானைகள் உற்சாகம் பெற்றுள்ளது. எங்களுக்கு யானைகளை எப்படி நடத்துவது என்பது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயனுள்ளதாக இருந்தது, என்றார்.