உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாசக கோஷம் முழங்க சோமநாதருக்கு கும்பாபிஷேகம்!

திருவாசக கோஷம் முழங்க சோமநாதருக்கு கும்பாபிஷேகம்!

கொளத்தூர்: தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தர்களின் கோஷத்துடன், கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கொளத்தூர், சன்னதி தெருவில் அமைந்துள்ள, அமுதவல்லி உடனுறை சோமநாத சுவாமி கோவிலில், கடந்த 3ம் தேதி முதல், ஆறுகால யாகசாலை பூஜையுடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது. இந்த கும்பாபிஷேகத்தில், கோவிலில், புதிய கொடிமரம் நிறுவப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, கோவில் வாசலில், ஈச்ச மர இலைகள், வாழை, செவ்விளநீர், இளநீர், தென்னம்பாளை, பல்வேறு பழங்கள் மற்றும் மலர்களால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு 6வது கால யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில் 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என, பக்தர்கள் கோஷமிட்டு, கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். கொளத்தூர், மாதவரம், பெரவள்ளூர், பெரம்பூர், வில்லிவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். அன்னதானமும் நடந்தது. இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாணமும், வாண வேடிக்கைஉடன் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !