உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிகால் சோழன் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம்!

கரிகால் சோழன் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம்!

பெ.நா.பாளையம்: இடிகரையில் கரிகால் சோழனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வில்லீஸ்வரமுடையார் கோவிலுக்கு இம்மாதம் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொங்குநாட்டில் சிவாலயங்கள் 36 உள்ளன. அவற்றுள் மாமன்னன் கரிகாலன் கட்டிய பெரிய கோவில்களில் 29வது கோவிலாக  நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே இடிகரையில் உள்ள அருள்மிகு வில்லீஸ்வரமுடையார் திருக்கோவில் இடம் பெறுகிறது.  இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பெருமையுடைய இக்கோவில் போதிய பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து கிடந்தது. இடிகரை வட்டாரத்தில் வசிக்கும் பொது மக்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக பழுதடைந்து இருந்த கோவிலை செப்பனிட்டு, கட்டுமான பணிகளை முடித்துள்ளனர். தற்போது கோவில் வளாகத்தில் நைருதி வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சிவசூரியன், சிவசந்திரன், நவக்கிரஹம், பைரவர், நால்வர் ஆகியோருக்கான கோவில்கள், பரிவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் கும்பாபிஷேகம் இம்மாதம் 10ம் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம் துவங்கியது. தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாக பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி இம்மாதம் 10ம் தேதி திங்கட்கிழமை மகா அன்னதானம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், மேளதாளத்துடன் விநாயகர், சுவாமி, அம்பாள், வள்ளி தெய்வயானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் சிறப்பு குறித்து திருப்பணிக்குழு தலைவர் ராஜகோபால் கூறுகையில்,கல்லணை கட்டி சாதனை புரிந்தவுடன் கரிகாலன் சோழன் இப்பகுதிக்கு வந்து, குறத்தி ஒருவர் குறி சொல்ல, அதைக்கேட்டு இக்கோவிலை கட்டியதாக வரலாறு உள்ளது. பின், கொங்கு சோழர்களுள் ஒருவரான விக்கிரமசோழன் கடந்த 1255- 1263 ஆண்டுகளில் இக்கோவிலை புதுப்பித்து உள்ளார். பல்வேறு காலத்து சோழ மன்னர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் கோவில் கட்ட பயன்படுத்திய கற்களை கொண்டே கோவில் எழுப்பப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கிணறு பராமரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1974 நவ., 3ம் தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வரும் 10ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குமரகுருபர சுவாமிகள், மருதாசல அடிகளார், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !