வைகுண்ட பெருமாள் மகா மண்டப கும்பாபிஷேகம்
ADDED :4294 days ago
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம், கமலவல்லி உடனுறை வைகுண்ட பெருமாள் கோவிலில், புதிதாக கட்டப்பட்ட மண்டபத்துக்கு, கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் உள்ளது கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவில். இக்கோவிலில், பெருமாள் எழுந்தருளி சேவை செய்வதற்காக, கோவில் வளாகத்தில், புதிய மண்டபம் கட்டப்பட்டது. அந்த மண்டபத்திற்கான கும்பாபிஷேகம், நேற்று காலை 10:00 மணிக்கு வருவாய் துறை அமைச்சர் ரமணா தலைமையில் நடந்தது. முன்னதாக, காலை 7:00 மணிக்கு சங்கல்பம், கலச பூஜை மற்றும் மகா சாந்தி ஹோமமும், காலை 9:00 மணிக்கு மகா சாந்தியும், திருமஞ்சனமும், அதன்பின் காலை 10:30 மணிக்கு சாத்துமுறை, ஆர்த்தி மற்றும் தீர்த்த பிரசாதம் வினியோகமும் நடந்தது.