காரமடை அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் : இன்று தேர்த்திருவிழா!
மேட்டுப்பாளையம: காரமடையில் இன்று மாசிமகத் தேர்த்திருவிழா நடக்கிறது. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க அரங்கநாதப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.காரமடை அரங்கநாதப் பெருமாள் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பெட்டத்தம்மன் மலையில் இருந்து, ஸ்ரீரங்கநாயகி நாச்சியார் அம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, கோவில் அர்ச்சகர், ராமபாணம் என்ற பெருமாளின் அம்பை கையில் சுழற்றிக் கொண்டு வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு திருமஞ்சனம் சாத்தப்பட்டது.பின், உற்சவமூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் 4.00 மணிக்கு, மண்டபத்தில் அலங்காரம் செய்த பந்தலில் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. புண்ணியவாகம் முடிந்த பின்,பெருமாளுக்கு பூணூல் அணிவித்து, சுவாமிகளுக்கு கங்கணம் கட்டப்பட்டது. பின், அர்ச்சகர்கள் சுவாமிகளின் குலத்தை வாசித்தனர்.தொடர்ந்து, மஞ்சள் இடிக்கும் சடங்கு முடிந்த பின், மாங்கல்ய பூஜை செய்து, ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அர்ச்சகர்கள் மாலையை கையில் பிடித்தபடி ஆடிப்பாடி வந்தனர். பின், சுவாமிக்கு மாலை மாற்றும் சடங்கு நடந்தது. மணக்கோலத்தில் இருந்த சுவாமியின் முன்பு, ஆண்டாள் நாச்சியார் அருளிய வாரணமாயிரம் வாசிக்கப்பட்டது. பின், நெல்பொரியிடுதல், சாற்றுமுறை ஆசீர்வாதத்துடன் தீர்த்தப் பிரசாதம்வழங்கப்பட்டது.திருமணக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அரங்கநாதப் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து மதியம். 3.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.